CLICK HERE FOR BLOGGER TEMPLATES AND MYSPACE LAYOUTS »

Tuesday, December 23, 2008

இடைவெளிக்குள் நிர்பந்தமாய்
நிறுத்தபட்டிருக்கிறது
என் காதல்..

உனக்காக காத்திருந்த
நிமிடங்களெல்லாம்
நிம்மதியடைந்துவிட்டிருக்கிறது!

பிறவிபயனை அடைந்து
விட்டோம் என!

ஒரே ஒரு முறை
நீ எனை பார்க்கையில்
உன் கண்ணை பார்த்து
விடவேண்டுமென நினைக்கையில்

நீ பார்த்தாய்!
நான் பார்க்க முயற்சித்தேன்!

காத்திருந்த கண்களுக்கு
பெரும் விருந்து போல
எதிர் இருக்கையில்
தலை கவிழ்ந்து நீ

உன் தலை நிமிர்வின் போதெல்லாம்
என் விழி பாதாளம் நோக்க
விழி பார்க்க மறந்து
சிரம் தாழ்த்தி நான்

உன்னிடம் பேச வேண்டும்
எத்தனிக்கிறேன் பலமுறை
பார்வைகளில் விழுங்கிக் கொள்கிறேன்
உனையும் இடை வெளியையும்..

Friday, November 28, 2008



விடியலுக்காய் விழித்தே
இருக்கிறது இரவு
இரவினை சூரியன் தின்ன
ஒப்பனைக்குள்ளாகிறேன்!

வழக்கத்தை விடநேரம்
எடுக்கிறது கண்ணாடிமுன்னே
ஆடைதேர்ந்தெடுத்தலுக்கும்
தலை சீவலுக்கும் மாதிரிகள்
பல எடுத்துவிட்டேன்!

தசாவதாரத்தை பின்னுக்கு
தள்ளிவிட்டதாய் தங்கையின்
கிண்டலை செல்லமாய் கொட்டிவிட்டு

பேருந்துக்கு வந்திருந்தேன்
பேருந்துதலில் வந்திருந்தேன்
கண்கள் தேடிய புன்னகை
எதிரிருக்கையில் இருக்கையில்

நோக்கும் திறனை இழந்தே
தலைகவிழ்ந்து போனேன்!

விடியலுடன் போரிடுகிறேன் நான்
வைகறையில் எழுந்திருந்து
காலத்தை எண்ணிக் கொண்டு
கடி காரத்தை முறைக்கிறேன்

கடிகாரத்தில் எட்டடிக்க
அவசரமாய் புறப்படுகிறேன்
உன் தரிசனம் எதிர்பார்த்தே

நேற்றுப் பார்த்த நினைவு
விழியில் ஊஞ்சலாட
காத்திருக்கிறேன் பேருந்துக்காக
உன்னை சந்திப்பதற்காகவே..

Thursday, November 27, 2008

இன்றைய பயணமெனது
முடிந்தாலும் முடியாததாகிறது
என் பொழுது!

உன்னிடம் விட்டுவிட்ட
மனதையும் பேருந்தில்
உன் பின்னே அனுப்பிய
எண்ணங்களையும்
மீள்சுழல் செய்கிறேன்!
மீளவே இல்லை நான்!

தூக்கமின்மை ஆட்டுவித்த
இரவில் தீட்டுகிறேன்
திட்டங்களை!

எதேச்சையாய் நேர்ந்த
பயணத்தை உனக்காக
தொடர்ச்சியாக்கினேன்!

நாளை என் காலை
பூமாலையாகுமென!


கூட்டத்தின் நெரிசலில்
உன் கடிகாரத்தில் சிக்கிய
என் துப்பட்டாவை பிரித்த போது
சிக்கிக் கொண்டது என் மனதும்

எங்கேயோ பார்த்த முகமாய்
ஆயிரங்காலம் வாழ்ந்த நிகழ்வாய்
மறுபடி மறுபடி வந்து போனாய்
என் பேருந்து இல்லாப் பயணத்திலும்

மீண்டும் அங்கு வருவாயோ
உனை மறுபடி பார்ப்பேனா
யார் என அறிமுகம் கொள்வேனா
என முடிந்து போகிறது இன்று.

Thursday, October 9, 2008

ஒரு பயணத்தின்
நெரிசலில் தொடங்கியது
நம் விழிப்போர்!

உன்னிலிருந்து விலகி
நிற்கவே நினைத்தேன்
நெருங்கிகொண்டது
மனது!

விழியில் தொலைத்து
இதழில் தேடினேன்
மனதை!

கிடைக்கபெற்றது
சிநேகித புன்னகையும்
அதனூடான மௌனமும்!

பெற்றுகொண்டு
புறப்படுகிறேன் நாளையும்
கிடைக்குமா என?

என் மனதல்ல
உன் தரிசனம்!